தமிழ்நாடு

சொந்த ஊர் வந்தது ராணுவ வீரர் பழனியின் உடல்: கிராம மக்கள் இறுதி அஞ்சலி

webteam

லடாக் பகுதியில் வீர மரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு வந்தது. நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த பழனியின் உடலுக்கு ராணுவ வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்

லடாக் பகுதியில் நடந்த இந்தியா - சீனா மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தின் மதுரை மாவட்டம், கடுக்கலூரை சொந்த ஊராக கொண்ட பழனி என்ற வீரரும் வீர மரணம் அடைந்தார்.

இந்நிலையில், ராணுவ வீரர் பழனியின் உடல் மதுரை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கடுக்கலூர் கொண்டு வரப்பட்டது. கிராம எல்லையிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரது உடல் ராணுவ வாகனத்தில் மாற்றப்பட்டு ஊர்வலமாக சொந்த கிராமமான கடுக்கலூர் கொண்டு வரப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் பழனியின் உடல் இராணுவ மரியாதையுடன் கொண்டு வரப்பட்டது.

தேசியக் கொடி போர்த்திய பழனியின் உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர். முதல்வர் அறிவித்த 20 லட்ச ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் குடும்பத்தாரிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து பழனியின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தற்போது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த பழனியின் உடலுக்கு ராணுவ வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.