செங்கள் சூளை உரிமையாளர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் சுமார் 100 பேர் வீட்டிக்கு வந்து தன்னை மிரட்டுவதாக கோவை சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கணேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் உள்ள செங்கல் சூளைகளின் எண்ணிக்கை, அவற்றிற்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என சமூக ஆர்வலர் கணேஷ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, செங்கல் சூளைகளுக்கு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்று மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கோவை வடக்கு மண்டலம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதுகுறித்து புதிய தலைமுறையில் பிரத்யேக செய்தி வெளியானது.
இந்நிலையில் செங்கல் சூளை உரிமையாளர்கள், கட்சிப் பிரமுகர்கள் என சுமார் 100 பேர் வீட்டுக்கு வந்து தன்னை மிரட்டுவதாக சமூக ஆர்வலர் கணேஷ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கணேஷின் வீட்டு முன்பு ஏராளமானோர் குவிந்திருக்கும் சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.