பாம்பு குட்டிகளை தேடும் மக்கள்
பாம்பு குட்டிகளை தேடும் மக்கள்  PT WEB
தமிழ்நாடு

தேனி | இரவில் மட்டும் படையெடுத்து வரும் பாம்பு குட்டிகள்; விடிய விடிய தூங்காமல் தவிக்கும் மக்கள்!

விமல் ராஜ்

செய்தியாளர் - மலைச்சாமி 

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த மூன்று நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீடுகளுக்கு முன்பாக இருக்கும் கழிவுநீர் வாய்க்கால் வழியாகவும், கழிவறை வழியாகவும் குட்டி பாம்புகள் ஊர்ந்து கொண்டே வந்துள்ளன.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் பாம்பு குட்டிகளை விரட்ட முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் மீண்டும், மீண்டும் பாம்பு குட்டிகள் வந்துள்ளது. குறிப்பாக இரவு முழுவதும் பாம்பு குட்டிகளின் படையெடுப்பு அதிகமாக இருப்பதால் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் தவித்து வருவதாகக் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இரவில் தொடர்ந்து வந்த பாம்புகள்

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு முன்பே, ஆண்டபட்டி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் பாம்பு இருக்கும் பகுதியைக் கூறினால் மட்டுமே வரமுடியும் என தீயணைப்புத்துறையினர் அலட்சியமாகப் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து கிராம மக்கள், பாம்பு குட்டிகளை விரட்டுவதற்காகத் தோட்டத்தில் மருந்தடிக்க பயன்படுத்தப்படும் மோட்டாரை பயன்படுத்தி கழிவுநீர் கால்வாய்களுக்குள் மருந்து அடித்துள்ளனர். அதில் வெளியே வரும் பாம்பு குட்டிகளை அப்புறப்படுத்தி வந்துள்ளனர்.

தேனியில் இரவில் தொடர்ந்து வந்த பாம்புகள்

கடந்த மூன்று நாட்களாகக் குழந்தைகளை வைத்துக் கொண்டு இரவு பகலாகத் தூங்காமல், பாம்பு குட்டிகளை விரட்டும் வேலை செய்து வருவதால், கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர் அம்மக்கள். இவ்விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.