திருப்பதியில் இலங்கை அதிபர் வந்த போது வானில் பறந்த குட்டி விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி திருமலையில் இலங்கை அதிபர் வந்த சில நிமிடங்களில் வானில் பறந்த குட்டி விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநில சுற்றுலா துறை அலுவலகம் அருகே வானில் பறந்து வந்த குட்டி விமானம் திடீரென அங்குள்ள மரத்தில் சிக்கி விழுந்தது. உடனடியாக அங்கு வந்த தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளும், போலீசாரும் குட்டி விமானத்தை மீட்டனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் திருப்பதி தேவஸ்தான வனத்துறை சார்பில் பூங்கா அமைப்பதற்கான ஆய்வில் குட்டி விமானம் ஈடுபட்டது என தெரியவந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய சிறிசேனா இன்று இந்தியா வந்தார். சிறிசேனாவுடன் அவரது மனைவி ஜெயந்தி புஷ்ப குமாரி மற்றும் இலங்கை அதிகாரிகள் வந்தனர். திருப்பதிக்கு காரில் சென்ற போது ஆந்திர-கர்நாடக எல்லையான பலமனேரு பகுதியில் மலர்கொத்து வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து இலங்கை அதிபர் திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றார்.
திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இன்று இரவு ஓய்வு எடுக்கம் இலங்கை அதிபர், நாளை காலை தரிசனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அதிபரி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்க்கிடையே குட்டி விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.