கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட 20 ஆயிரம் கனஅடி நீர், மேட்டூர் அணையை வந்தடைந்தது.
கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து நேற்று முன்தினம் 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று விநாடிக்கு 8 ஆயிரத்து 300 கன அடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், இன்று ஒரேநாளில் விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கணிசமாக குறைக்கப்பட்டு தற்போது 2 ஆயிரம் கனஅடி என்ற அளவிற்கு மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
இதனால் மேட்டூர் அணை இந்த ஆண்டு 3 ஆவது முறையாக அதன் முழுக்கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அணையின் நீர்மட்டம் தற்போது 115 அடியாக உயர்ந்துள்ளது நீர் இருப்பு 85 டிஎம்சி ஆக உள்ளது. நீர் திறப்பு பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.