Slow-moving Cyclone system Windy & ANI
தமிழ்நாடு

மெதுவாக நகரும் புயல் சின்னம் : எங்கே கரையைக் கடக்கும்?தமிழ்நாட்டுக்கு மழை பெய்ய வாய்ப்பா?

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Praveen Joshva L

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாய்லாந்தை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி அது அந்தமான் கடலை நோக்கி நகர்ந்தது. அதன் பின்னர் இது தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது.

இந்த நிலையில், இந்த புயல் சின்னத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது என்றும், இது அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், காற்றுச் சுழற்சி சாதகமாக இல்லாதது மற்றும் வறண்ட காற்று காரணமாக இது மேலும் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என்றும், இந்தத் தாழ்வு மண்டலம் முதலில் மேற்கு திசையிலும், பின்னர் வடமேற்கு திசையிலும் நகரும் என்றும் கூறியுள்ளார்.

அதே போல வலுவான இந்தோ-பசிபிக் உயர் அழுத்தக் காற்றும், மேற்கத்தியக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமும் மோதிக்கொள்வதால், இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடற்கரையை நெருங்கும் போது நகராமல் மெதுவாக அல்லது ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் சூழல் உருவாகும் என்றும் ஹேமச்சந்தர் குறிப்பிட்டுள்ளார்.

Hemachandar

அதோடு இந்த புயல் சின்னம் வட தமிழகத்தின் எல்லைப்பகுதி மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், பிற மாவட்டங்களில் பெரிய அளவு தாக்கம் இருக்காது என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் புயல் சின்னம் கரையை நெருங்கும் சூழலில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.