சென்னை அயனாவரம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியும், சிறிய கேமராவும் பொருத்தப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள கான்ஸ்டபிள் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது கீபேட் மேலே சிறிய அளவு கேமரா இருப்பதை பார்த்த அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இயந்திரத்தை சோதனை செய்ததில் ஸ்கிம்மர் கருவி ஒன்றும், சிறிய கேமராவும் பொருத்தப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதனை அடுத்து வங்கி நிர்வாகிகளுக்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர். இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். சென்னையில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருடும் நபர்கள் குறித்த விவரங்கள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் இருப்பதால், அவர்களும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.