பாலியல் வழக்கில் கைதான தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிவசங்கர் பாபாவுக்கு ஜூலை 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் அவர் மீது போக்சோ-வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபா டேராடூனில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சிபிசிஐடி உத்ராகண்ட் விரைந்தது. ஆனால், அவர் டெல்லி அருகே காஸியாபாத்தில் பதுங்கியிருந்ததை அறிந்த சிபிசிஐடி, பல்வேறு தேடலுக்கு பின் நேற்று அவரை கைது செய்தது.
நள்ளிரவு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட அவர், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் விடிய விடிய நடைபெற்ற விசாரணை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை மருத்துவ பரிசோதனைக்கு சிபிசஐடி அழைத்து சென்றது. பரிசோதனைக்கு பின்னர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனிடையே சிவசங்கர் பாபாவை கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டம்.காவல்துறையினர் தடுத்த போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிவசங்கர் பாபாவை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். மாதர் சங்கத்தினரும் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிவசங்கர் பாபாவுக்கு ஜூலை 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.