செய்தியாளர்: A.மணிகண்டன்
விருதுநகர் மாவட்டம சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் ராஜரத்தினம் என்பவருக்குச் சொந்தமான ஸ்டாண்டர்ட் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 80க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரசாயன கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர் தகவல் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.