தமிழ்நாடு

“நீட் தேர்வில் வென்றும் மருத்துவம் படிக்க முடியலையே?” - மாணவருக்கு உதவுமா அரசு

webteam

நீட் தேர்வில் வென்றும் தபால் துறையின் அலட்சியத்தால் வசந்த் என்ற மாணவர் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாண்டிச்செல்வம் என்பவரின் மகன், வசந்த். இவர் சிறுவயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுடனும், லட்சியத்துடனும் படித்து வந்துள்ளார். இவரது தந்தை பாண்டிச்செல்வம் மகனின் படிப்பிற்காக குடும்பத்தை பிரிந்து, வெளிநாட்டில் ஓட்டுநராக பணிபுரிந்து பணம் அனுப்பி வந்துள்ளார். பள்ளி படிப்பின்போதே நன்றாக படித்து வந்த வசந்த், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார்.

அதுமட்டுமின்றி மருத்துவம் படிக்க நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால், நீண்ட நாட்களாக நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். நீட் தேர்வு எழுதிய அவர், அதில் 384 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியும் அடைந்துள்ளார். இதனால் மருத்துவம் படிக்க தகுதிபெற்ற அவர், மருத்துவப்படிப்பிற்கான விண்ணப்பத்தை சென்னை மருத்துவக்கல்லூரிக்கு ஜூன் 14ஆம் தேதி தபால் மூலம் அனுப்பியுள்ளார். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 19ஆம் தேதி ஆகும். ஆனால் தபால் மூலம் 3 நாட்களில் விண்ணப்பம் சென்றுவிடும் எண்ணிக்கொண்டு வசந்தும், அவரது தாயும் இருந்துள்ளனர். ஆனால் தபால்துறையின் அலட்சியத்தால் 3 நாட்களில் சென்று சேர வேண்டிய விண்ணப்பம், 10 நாட்களுக்குப்பிறகு 24ஆம் தேதி சென்று சேர்ந்துள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி முடிந்துவிட்டதால், வசந்தின் விண்ணப்பத்தை மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் நிராகரித்துள்ளது. தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து பதறிப்போய் வசந்தும், அவரது தாயும் சென்னை மருத்துவக்கல்லூரியை நாடியுள்ளனர். அப்போது விண்ணப்பம் தாமதமாக வந்து சேர்ந்ததை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்த தாங்கள் விண்ணப்பத்தை 14ஆம் தேதியே அனுப்பியதையும், தபால்துறையின் அலட்சியத்தால் தாமதம் ஏற்பட்டதையும் கூறி தங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வசந்தும், அவரது தாயும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஆனால் தாபல் துறையின் தவறுக்கு தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என நிர்வாகம் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் சிறுவயது முதலே மருத்துவக் கனவுடன் இருந்த வசந்தும், அவரது தாயும் நொந்து போய் மன உளைச்சல் அடைந்துள்ளனர். தபால்துறையின் அலட்சியத்தால் மருத்துவப்படிப்பை இழந்த தன் மகனுக்கு, மீண்டும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்க அரசு உதவ வேண்டும் என வசந்தின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.