சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரு கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது ஆவரங்காடு மற்றும் கச்சநத்தம் கிராமங்கள். இந்த கிராமத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த சிலர் வழிமறித்து தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆவரங்காடு கிராமத்தினர், கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து தாக்கியுள்ளனர். அதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களை கத்தியால் சராமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் சுரேஷ், சந்திரசேகர், மருது, மலைச்சாமி, சுகுமாறன், தனசேகரன்,ஆறுமுகம், சண்முகநாதன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை டிஎஸ்பி சுகுமாறன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் கச்சநத்தம் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆறுமுகம் மற்றும் சண்முகநாதன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தனர். இத்தாக்குதலில் இருந்து தப்பி வயல்வெளிகளில் தஞ்சமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய ஆவரங்காடு கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மானாமதுரை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.