சிவகங்கை மாவட்டம் கீழச்சேவல்பட்டி அருகே உள்ள அச்சரம்பட்டியில் வசித்து வருபவர் குமரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 18 வயது மகள் இருந்துள்ளார். அவர் வாய் பேச முடியாதவர் எனக் கூறப்படுகிறது. இன்று காலை அந்த பெண்ணின் தாய், தந்தை வெளியில் சென்றுள்ளனர். வீட்டில் பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
திடீரென சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பெண்ணின் வீட்டுக்கு வந்து பார்த்த போது, அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்தை ராமநாதபுரம் சரக டிஐஜி காமினி, மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது பெண்ணின் உடம்பில் ஆங்காங்கே கீறியது போல் காயங்கள் இருப்பதாகவும் , தனியாக இருக்கிறார் என்பதை அறிந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் உரிய பரிசோதனை முடிவிலேயே இது குறித்து உறுதியாக தெரிவிக்க முடியும் என கூறினர், சிறுமியை கொலை செய்தவர்களை தேடி வருவதாக கூறிய அவர்கள், எங்கே தங்களை அடையாளம் காட்டி விடுவாரோ என்ற எண்ணத்தில் குற்றவாளிகள் அவரை கொலை செய்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஊரைச் சேர்ந்த பலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறிய போலீசார் தடயங்களை வைத்து பார்க்கும் போது தெரிந்தவர்களே சிறுமியை கொலை செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறினர்.