சிவகங்கை மாவட்டத்தில், பெருமாள்புரம் கிராம மக்கள், புதிய சுவர் கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 12 அடி உயர சுவர், சமூகத்தை தனிமைப்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது. காவல்துறை பாதுகாப்புடன் சுவர் கட்டும் பணி நடைபெற, 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் சமூக அணுகல் உரிமை மீறலாக பார்க்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கழுகேர்கடை ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்புரத்தில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த 150 குடும்பங்கள், தமிழ்நாடு அரசு வழங்கிய நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். மேலும், அவர்களின் குடியிருப்பு அருகிலுள்ள காலி நிலத்தை பல ஆண்டுகளாக மேய்ச்சல் நிலமாகவும், மதுரை – திருப்புவனம் நகரங்களுக்கு செல்லும் பாதையாகவும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
இந்நிலையில், சுமார் 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை 2020ஆம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த முகமது காஜா மற்றும் நஜ்முதீன் ஆகியோர் வாங்கியுள்ளனர். தொடர்ந்து, அந்த இடத்தில் பிஸ்கட் தொழிற்சாலை அமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தொழிற்சாலை அமைக்காமல் அந்த நிலத்தைச் சுற்றி 12 அடி உயரத்தில், நிலத்தின் உரிமையாளர்கள் சுற்றுச்சுவர் கட்ட முயன்றதால், 2021ஆம் ஆண்டே அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
அப்போது, நிலத்தின் உரிமையாளர் தொழிற்சாலை கட்டாமல், வீட்டுமனை கட்ட முடிவு செய்திருப்பதாகவும், பெரிய அளவிலான சுற்றுச் சுவர் கட்டுவதன் மூலம் தங்களை தீண்டாமைக்கு உட்படுத்துவதாகவும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதையடுத்து, அப்போது ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டு பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சுவர் கட்டும் பணி தொடங்கியதால் பெருமாள்புரம் கிராம மக்கள் தாசில்தாரிடம் புகார் அளித்தனர். “இது பட்டா நிலம் என்பதால் தடுக்க முடியாது” என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நில உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் காவல்துறை பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. அதன்படி இன்று, காவல்துறையினர் பாதுகாப்புடன் சுவர் கட்டும் பணி தொடங்கியபோது, கிராம மக்கள் சுற்று சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். மேலும், பெண்கள் சிலர் மதுரை–பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கழுகேர்கடை விலக்கு அருகே சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதன்காரணமாக, பெண்களும் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” என்கின்றனர்.
அதேசமயம், கிராம மக்கள் தரப்பில் இருந்து பேசும்போது, “நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் எங்களை தனிமைப்படுத்தும் வகையில் சுவர் கட்டப்படுகிறது; பொதுவழியும் மேய்ச்சல் நிலமும் மறுக்கப்படுகிறது” என குற்றம்சாட்டினர். இதனால், தனியார் நில உரிமை மற்றும் சமூக அணுகல் உரிமை என்ற இரு தரப்புகளுக்கிடையே பதற்றம் நிலவுவதால் பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.