தமிழ்நாடு

சீர்காழி: சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால்ஆபத்தான பக்கிங்காம் கால்வாயை கடந்து செல்லும் அவலம்

சீர்காழி: சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால்ஆபத்தான பக்கிங்காம் கால்வாயை கடந்து செல்லும் அவலம்

kaleelrahman

சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய, ஆபத்தான பக்கிங்காம் கால்வாயை கடந்து செல்லும் அவலம் - பாலம் அமைத்து தரக்கோரி கிராமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவர் கிராமத்தில் 800 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த யாராவது இறந்துவிட்டால் அவர்களை பக்கிங்காம் கால்வாய் மறுபுறம் உள்ள மயான கொள்ளையில் தகனம் செய்வது வழக்கம். பல ஆண்டுகளாக தொடரும் இந்த சம்பவத்தால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் பக்கிங்காம் கால்வாயில் கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக முதலைகள் நடமாட்டம் உள்ளது குறித்த எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வேறு வழியின்றி இறந்தவர்களின் உடலை இந்த பக்கிங்காம் கால்வாயை கடந்தே அச்சத்துடன் சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.

இதையடுத்து இன்று மாலை தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி விசாலாட்சி என்பவர் இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்ய எடுத்துச் சென்ற மக்கள் பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து செல்ல பாலம் அமைத்து தரக்கோரி அவரது உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கிராம பெரியவர்களின் கோரிக்கையை ஏற்று மூதாட்டியின் உடலை பக்கிங்காம் கால்வாய் வழியே எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.