தமிழ்நாடு

இரட்டை கொலை வழக்கு: 8 ஆண்டுகளுக்கு பின் ஒருவர் கைது.. நீடிக்கும் மர்மம்..!

இரட்டை கொலை வழக்கு: 8 ஆண்டுகளுக்கு பின் ஒருவர் கைது.. நீடிக்கும் மர்மம்..!

webteam

சீர்காழியில் நடைபெற்ற பாட்டி பேத்தி இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.  

நாகை மாவட்டம் சீர்காழி ஈசானியத் தெரு மெயின் ரோட்டில் வசிப்பவர் முகமதுயூசுப்.  இவரது மனைவி ரபியாபீவி (40), மகள் சமீராபானு (20), மாமியார் கதிஜாபீவி (60) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி இரவு வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்த போது பின்வீட்டை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் வெளியே சென்றுள்ளார். வெகு நேரம் உள்ளே வராததால் ரபியாபீவி மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது பாண்டியம்மாள் தலையில் அடிபட்டு கிடந்துள்ளார். வயதானவர் என்பதால் தவறி விழுந்து அடிபட்டிருக்கலாம் என கருதி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு ரபியாபீவி வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது வீடு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. உள்ளே பார்த்தபோது வீட்டில் இரத்த வெள்ளத்தில் மகள் சமீராபானு, பாட்டி கதிஜாபீவி இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததார். இதுகுறித்து சீர்காழி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் சீர்காழி போலீசார் வழக்கை கிடப்பில் போட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து சமீராபானு குடும்பத்தினர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதனையடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாற்றபட்டது. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டனர். 

இந்நிலையில் கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் சுரேஷ்குமார் என்கின்ற சுரேஷ் (27) குறித்து தீவிரமாக விசாரணை செய்து தேடி வந்தனர். போலீசார் தன்னை நெருங்கியதை அறிந்த சுரேஷ் நாகை வெளிப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் செல்வத்திடம் சரணடைந்தார்.அவரைக் கைது செய்து சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தனது நண்பர்களான கடலூரை சேர்ந்த சேகர் மகன் தினேஷ்குமார், பாதிரிகுப்பம் கமல், கடலூர் காரமணிகுப்பம் ஆனந்தன் ஆகியோர் இணைந்தே சீர்காழியில் கடந்த 2011-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த பாட்டி மற்றும் பேத்தியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கொலை நடந்த வீட்டிற்கு சுரேஷை அழைத்து சென்று நடந்ததை செய்ய சொல்லி பதிவு செய்தனர். பின்னர் சுரேஷை நாகப்பட்டினம் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர், திருட்டுக்காக கொலை நடைபெற்றதாக போலீசார் கூறுவதை ஏற்க மறுத்துள்ளனர். “கொலை நடந்த அன்று சமீராபானு மற்றும் அவரது பாட்டி அணிந்திருந்த நகைகள் திருடப்படவில்லை. வீட்டின் பீரோவில் பணம் நகைகளுடன் திறந்தே இருந்தது, அதுவும் திருடப்படவில்லை. பெண்ணின் செல்போன் மட்டுமே மாயமானது. எனவே கொலைக்கான உண்மை காரணத்தையும் அதற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.