தமிழ்நாடு

ஸ்டெர்லைட் விரிவாக்க நிலம்: ரத்து செய்தது சிப்காட்!

ஸ்டெர்லைட் விரிவாக்க நிலம்: ரத்து செய்தது சிப்காட்!

webteam

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு ஒதுக்கீடு செய்த நிலத்தை சிப்காட் ரத்து செய்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், அந்த ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்காக, 2வது யூனிட்டுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை சிப்காட் ரத்து செய்துள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி சிப்காட் மேலாண் இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதும் ஆலையால் உடல்நலம்‌ பாதிக்கப்படுவதாக மக்கள் கூறும் புகார்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதன் கார‌ணமாக ஸ்டெர்லைட்டின் இரண்டாவது யூனிட்டிற்காக 200‌5, 2006‌ 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் செய்யப்பட்ட 342.22 ஏக்கர் நில ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலம் ஒதுக்கீட்டிற்காக பெறப்பட்ட தொகை திருப்பி வழங்கப்படும் என்றும் சிப்காட் நிர்வாகம் அறிவித்துள்ளது.