தமிழ்நாடு

சிங்கார சென்னை உணவுத் திருவிழா: இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி!

webteam

சிங்காரச் சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில் “சிங்காரச் சென்னையில் உணவுத் திருவிழா” என்ற 3 நாள் திருவிழாவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தனர். இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவுகள், பலவகையான உணவு வகைகள், பிரியாணி வகைகள், மீன் உணவுகள், நெல்லை இருட்டுக்கடை அல்வா உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த திருவிழாவின் பீப் உணவு வகைகள் ஒன்று கூட இடம்பெறாதது சர்ச்சையாக உருவெடுத்தது. இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “உணவு திருவிழாவில் பீப் பிரியாணி கடை போட யாரும் அனுமதி கேட்கவில்லை. இனி யாராவது கேட்டால் அனுமதிப்போம் . நல்ல வகையில் திருவிழா திட்டமிட்டு இருப்பதால் சில நடவடிக்கையால் சர்ச்சைகளாக மாற வேண்டாம். நான் கூட பீப் பிரியாணி சாப்பிடுவேன்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று முதல் உணவு திருவிழாவில் 3 பீப் கடைகளுக்கு மாநில சுகாதாரத்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுக்குபாய் பிரியாணி அரங்கில் இன்று முதல் பீப் பிரியாணி விற்பனை செய்யப்பட உள்ளது. நாளை இரவு 10 மணி வரை இந்த திருவிழா நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.