5000 லஞ்சம் பெற்ற எஸ்ஐ பணியிடை நீக்கம் pt
தமிழ்நாடு

திருமணத்தை மீறிய உறவு விவகாரம்.. ரூ.5000 லஞ்சம் வாங்கிய SI பணியிடை நீக்கம்!

திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் விசாரணைக்கு வந்தவரிடம் 5000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக உதவி காவல் ஆய்வாளரும், தலைமை காவலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

PT WEB

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திருமணத்தை மீறிய உறவு விவகாரம் தொடர்பான விசாரணையின் போது, லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்தவிவகாரம் தொடர்பான ஆடியோ வெளியான நிலையில், இரண்டு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமாகிய பெண்ணுக்கும் இடையேயான தொடர்பு குறித்துப் பெண்ணின் கணவன் கண்டித்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், முகேஷ் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால், மனமுடைந்த தம்பதியினர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்துப் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்சன், முகேஷைக் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது முகேஷிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பொள்ளாச்சி காவல் நிலையம்

லஞ்சம் வாங்கிய விஷயம் வெளியே தெரிந்ததை அடுத்து, தலைமை காவலர் நாகராஜன், முகேஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் முகேஷோ, "பணம் எனக்கு வேண்டாம், இந்தப் பிரச்சினையில் இருந்து தீர்வு கிடைத்தால் போதும்" என்று புலம்பும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, லஞ்சப் புகாரில் சிக்கிய உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் தலைமைக் காவலர் நாகராஜன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்தநிலையில் இருவரையும் கோவை ஆயுதப்படை காவலர் பயிற்சி மையத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது ஜான்சன் மற்றும் நாகராஜ் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.