கடலூர் வெள்ளி கடற்கரை pt web
தமிழ்நாடு

கடலூர் | கடல் தின்று போட்ட மிச்சம்.. உருமாறிய வெள்ளிக்கடற்கரை!

கடலில் ஏற்படும் மாற்றங்கள் பல பேரிடர்களை உலகம் முழுவதும் தந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களின் அறிகுறிகள் கடலூர் வெள்ளிக்கடற்கரையிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது.

PT WEB

அச்சமூட்டும் வகையில் கடல் மட்டம் உயர்ந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அஞ்சுகிறார்கள். கடலில் ஏற்படும் மாற்றங்கள் பல பேரிடர்களை உலகம் முழுவதும் தந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களின் அறிகுறிகள் கடலூர் வெள்ளிக்கடற்கரையிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது.

2022 ஆம் ஆண்டு கடலூர் வெள்ளிக்கடற்கரையின் கழுகுப்பார்வை காட்சி..

அதேஇடத்தில் 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கழுகுப்பார்வை காட்சி..

இந்த இரு காட்சிகளுக்குமான வித்தியாசமே சொல்லும் கடலூர் வெள்ளிக்கடற்கரையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை.. சென்னை மெரினாவுக்கு அடுத்தப்படியான மிகப்பெரிய மணல் பரப்பு கொண்ட கடலூர் வெள்ளிக்கடற்கரையில் நீண்ட தூரம் நடந்து சென்றால்தான் கடல் நீரில் கால் வைக்க முடியும் அந்த அளவு மணல் பரப்பு மிகப் பெரிய அளவில் இருந்தது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு அந்த மணல் பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி தற்போது கடல் தின்று போட்ட மிச்சம் தான் அங்கு கிடைக்கிறது, அதுவும் இன்னும் சில காலங்களில் காணாமல் போகும் என தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

தேவனாம்பட்டினம் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதியில் சுனாமிக்குப் பிறகு பெரிய தடுப்பு அரண் அமைக்கப்பட்டு அந்த ஊர் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் வெள்ளி கடற்கரையை ஒட்டி எந்தவிதமான தடுப்பும் ஏற்படுத்தப்படாத காரணத்தினால் வெள்ளிக் கடற்கரையை தற்போது கடல்நீர் மென்று தின்று வருகிறது..

அண்டார்டிகாவில் உள்ள பெரிய பனிப்பாறையான ஏ 23a இன்னும் ஒரு மாதத்திற்குள் உடைந்து விடும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 1986 ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் உள்ள பனிப் பாறையில் இருந்து தனியாக உடைந்து பிரிந்து வந்தது தான் இந்த பனிப்பாறை. கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாக உருகாமல் உறைந்து நின்றது. தற்போது படிப்படியாக உடையத் தொடங்கியுள்ள இந்த பனிப்பாறையின் பரப்பு, தற்போதுள்ள லண்டனை விட இருமடங்கு அளவில் பெரியதாக கணிக்கப்படுகிறது.

பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக கடல்மட்டம் உயர்வது மனித குலத்துக்கான எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது. கடல்மட்டம் உயர்வதால் கடற்கரையை ஒட்டிய சிறு கிராமங்கள் பலவும் அழிந்துபோகும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. பல கடற்கரைகள் இருந்த இடம் தெரியாமல்போகும் என்ற அதிர்ச்சித் தகவலையும் பகிர்கிறது ஐநாவின் காலநிலை அறிக்கை. இதனை உறுதி செய்வது போன்று கடலூர் வெள்ளிக்கடற்கரை காட்சியளிக்கிறது.