தமிழ்நாடு

பரமக்குடி: வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைப்பு - அறநிலைத்துறை அதிகாரி நடவடிக்கை

Sinekadhara

பரமக்குடியில் 13 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாத 10 கடைகளுக்கு சீல் வைத்துள்ளார் இந்து அறநிலைத்துறை அதிகாரி.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மேலசத்திரம் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு மாதந்தோறும் வாடகை கட்டணம் உரிமையாளர்கள் செலுத்தி வந்தனர். கடந்த 2016 முதல் ஆறு வருட காலமாக பாக்கி தொகை ரூ. 13,00,00 லட்சம் என 10 கடைகளின் வாடகை நிலுவையில் இருந்த நிலையில், அதனை செலுத்தாத உரிமையாளர்கள் மற்றும் கடைகளுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில் நீங்கள் செலுத்தவேண்டிய வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால் உங்கள் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்து இருந்தனர். அதனையும் பொருட்படுத்தாமல் உரிமையாளர்கள் வாடகை பாக்கியை தட்டிக் கழித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்து சமய நலத்துறை ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான குழு நடவடிக்கையாக 10 கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர். மேலும் செலுத்தவேண்டிய பாக்கி வாடகைத் தொகையை செலுத்தினால் உரிமையாளர்கள் கடைகளை நடத்திக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.