தமிழ்நாடு

எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர் கைது

எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர் கைது

webteam

பிரபல எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய மளிகைக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் வசித்து வருகிறார், எழுத்தாளர் ஜெயமோகன். தமிழ் மற்றும் மலையாளத் தில் பல்வேறு படைப்புகளை எழுதியுள்ள இவர், நான் கடவுள், அங்காடித் தெரு, கடல், 2.0, சர்கார் உட்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

அவர் பார்வதிபுரத்தில் உள்ள செல்வம் என்பவரின் கடையில் நேற்றிரவு தோசை மாவு வாங்கிச் சென்றார். பின்னர் அது சரியாக புளிக்கவில்லை என்று கூறி கடையில் திருப்பிக் கொடுத்தார். அப்போது கடைக்காரர் செல்வத்தின் மனைவி தீபாவுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சிலர் கடைக்காரருடன் சேர்ந்து அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வடசேரி காவல் நிலையத்தில் ஜெயமோகன் புகார் அளித்தார். போலீசார், கடைக்காரர் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

காயம் காரணமாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயமோகன் கூறும்போது, ‘’ கடைக்காரரை எனக்குத் தெரியும். மாவு பிரச்னையில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று அடிக்க ஆரம்பித்தார். வலுவாகவே அடித்தார். நான் கீழே விழுந்துவிட்டேன். என் கண்ணாடி உடைந்துவிட்டது. பிறகு நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். இதை அப்படியே விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தேன். அவர் என் வீட்டுக்கு வந்து மனைவி உட்பட எல்லோரையும் ஆபாசமாகத் திட்டி, பெரிய பிரச்னை செய்தார். இதையடுத்து போலீசில் புகார் செய்தேன்’’ என்றார்.

கடைக்காரர் செல்வத்தின் மனைவி தீபாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி கடை ஊழியர் கூறும்போது, ’’ மாவு வாங்கிவிட்டு சென்ற ஜெயமோகன், எங்கள் முதலாளியம்மாவை அடித்தார். அதனால் அவரை முதலாளியம்மா  தள்ளினார். இதை பார்த்த என் முதலாளி, ஜெயமோகனை அடித்தார். இருவரும் மாறி மாறி அடித்தார்கள். இரண்டு பேருமே சண்டை போட்டார்கள்’’ என்று தெரி வித்தார்.

இதுபற்றி விசாரித்த வடசேரி போலீசார், கடைக்காரர் செல்வத்தை கைது செய்துள்ளனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.