பட்டியலின மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் பால் வழங்கினால் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஏதாநெமிலி கிராமத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் பேனர் கிழிப்பு சம்பந்தமாக இரு பிரிவினரிடையே முன் விரோதம் ஏற்பட்டது. இது சம்மந்தமாக தீபாவளி பண்டிகையின் போது இரு பிரிவினரிடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த 30ந் தேதி செஞ்சி வட்டாச்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
அன்று முதல் ஒரு பிரிவினர், பட்டியலின குடியிருப்பு பகுதி மக்களுக்கு தமது பகுதிகளில் உள்ள மளிகை கடையிலிருந்து பொருட்கள் கொடுக்கக்கூடாது, அதேபோல் டீக்கடையில் டீ கொடுக்கக் கூடாது, மேலும் பட்டியலின மக்கள் கொண்டு வரும் பாலை கூட்டுறவு பால் அங்காடியில் வாங்கவும் விற்கவும் கூடாது என சமூக கட்டுப்பாடு விதித்து தீர்மானம் நிறைவேற்றபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கட்டுப்பாட்டை மீறுபவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்பிரச்னை குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செஞ்சி வட்டாச்சியரிடம் மற்றும் செஞ்சி காவல் நிலையத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.