தொடர்ச்சியாக 3 நாட்கள் குண்டலினி யோகாவில் இருந்த சிவபக்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை சூர்யாநகர் மீனாட்சியம்மன் நகர் வடக்கு 6-வது தெருவில் வசிப்பவர் ஜெகதீபன் (39). மும்பை ஐஐடியில் பணிபுரிந்து வந்த இவர், பணியை விட்டுவிட்டு தனது தாயுடன் இருந்து வந்துள்ளார். சிவபக்தரான இவர், நாள்தோறும் தவம் செய்வதாகக் கூறி பல்வேறு யோகாசனங்களை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதியன்று குண்டலினி யோகா செய்ய போவதாகவும், 3நாட்களுக்கு யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என தனது தங்கை மற்றும் தாயிடம் கூறிவிட்டு வீட்டின் அறையை பூட்டியபடி குண்டலனி யோகா செய்ய தொடங்கியுள்ளார்.
இதையடுத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், கதவை திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலை காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஜெகதீசனின் தலையில் இருந்த புண் சீல்வைத்து ரத்தம் வெளியாகி அதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.