எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழன்
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழன்  PT WEB
தமிழ்நாடு

"வாரிசுகளுக்கே DMK-ல் இடம்” ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் அதிமுகவில் ஐக்கியம்; பின்னணி என்ன?

இரா.செந்தில் கரிகாலன்

ஆர்.கே.நகரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவரும் திமுகவின் முன்னாள் அமைச்சர் மறைந்த சற்குணப் பாண்டியனின் மருமகளுமான சிம்லா முத்துச்சோழன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார்.

ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்!!

ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு பிரபலமான ஒருவர் அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. சிம்லா முத்துச் சோழன் ஏன் அதிமுகவில் இணைந்தார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக அவரின் அரசியல் பயணம் குறித்துப் பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்விகமாகக் கொண்டவர் சிம்லா முத்துச்சோழன். ஆனால், வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையிதான். எல்.எல்.பி முடித்த இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கிறார். அவரது கணவர் முத்துச் சோழனும் வழக்கறிஞர்தான்.

சிம்லா முத்துச் சோழன் பல ஆண்டுகளாக திமுக உறுப்பினராக இருந்து வந்தார். தொடர்ந்து, வடசென்னை மகளிர் வழக்கறிஞர் அணியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அடுத்ததாக, மாநில மகளிர் அணியின் பிரசாரக்குழு செயலாளர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அந்த நேரத்தில்தான், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலும் வந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு டஃப் ஃபைட் கொடுக்க திமுக தலைமை நினைத்தது. அந்தத் தொகுதியில் ஏற்கெனவே இரண்டுமுறை வெற்றிபெற்று அமைச்சராகவும் பதவி வகித்தவர் சற்குணபாண்டியன். ஆனால், 2016 தேர்தலின்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனால் அவர் போட்டியிடும் சூழல் இல்லை.

அப்போதுதான், ஜெயலலிதாவுக்கு எதிராக சிம்லா முத்துச்சோழனைக் களமிறக்கியது திமுக தலைமை. ஜெயலலிதாவுக்கு எதிரான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழகம் முழுவதும் அறியப்பட்ட நபராக மாறினார் சிம்லா முத்துச்சொழன்.

ஆனால், அந்தத் தேர்தலில் 30000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்தார் சிம்லா முத்துச்சோழன், ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. அதேபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட விரும்பினார்.

ஆனால், அப்போது, கலாநிதி வீராசாமிக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, தொடர்ச்சியாக 2021 மற்றும் நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட விரும்பினார். ஆனால், அவருக்கு இடம் கிடைக்கும் சூழல் இல்லை. அதனால்தான், அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என தமிழக அரசியல் வட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுகவில் இருந்து விலகியது குறித்து சிம்லா முத்துச் சோழன் பேசும்போது, "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு எனக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால், உறுதியளித்தபடி நடந்துகொள்ளவில்லை.

நான் பலமுறை அவருக்கு ஞாபகப்படுத்த முயன்றும் பலனில்லை. சமீபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நான் எடுத்த முயற்சிகளுக்கும் திமுக தலைமை தடை போட்டது.

இவ்வாறு திமுகவில் எனது வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அதிமுகவில் சேர்வது என்ற முடிவை எடுத்தேன். மிகவும் மனது உடைந்த நிலையில் தான் இந்த முடிவை எடுத்தேன். தற்போதையை திமுகவில் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் காலகட்டத்திலேயே அவர் வேறு கட்சிக்கு மாறப்போகிறார் என்கிற தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.