இஸ்லாமியர்களுக்கான இஃப்தார் நோன்பு திறப்பு.. அவர்களுக்கு ஆதரவாக நின்று வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராடியது என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியல் செய்து வரும் நிலையில், அவருக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ராஸ்வி.
இதுதொடர்பாக அறிவிப்பை வெளியிட்டிருக்கும் அவர், “தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் விஜய், தனது சினிமா பிரபலத்தை அரசியலுக்கு பயன்படுத்த முயல்கிறார். திரைத்துறைப் பயணத்தில் தனது படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தவர் விஜய். இதனால், அவரோடு இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம். விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இஃப்தார் விருந்துக்கு அழைத்துவந்து அதனை அவமதித்து பாவம் செய்துவிட்டார்” என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபத்வா கொடுத்திருக்கிறார்.
முன்பே சொன்னதுபோல, சில நாட்களுக்கு முன்பு தனது கட்சி சார்பாக இஸ்லாமியர்களை அழைத்து சென்னையில் இஃப்தார் நோன்பு திறப்பு விழாவை நடத்தினார் விஜய். ஒரு நாள் முழுக்க நோன்பிருந்து இஸ்லாமியர்களோடு நோன்பு திறந்தவர், அவர்களோடு தொழுகையும் மேற்கொண்டிருந்தார். அத்தோடு, தமிழ்நாடு முழுக்க தவெக சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அவைகளில் சட்டமாக நிறைவேறியபோது விஜய் அதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டதோடு, மாநிலம் முழுவதும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார் விஜய். இப்படியாக இஸ்லாமியர்கள் விவகாரத்தில் விஜய் தனி கவனம் செலுத்தி வரும் நிலையில், அவருக்கு எதிராக அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ராஸ்வி ஃபத்வா கொடுத்திருப்பது பேசுபொருளாக மாறி இருக்கிறது.