சென்னை தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பினர் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது சில இளைஞர்கள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து உள்ளே செல்ல முயன்றனர். அதற்கு காவல்துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீசாரை சக மாணவர்கள் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கல்லூரியில் நுழைந்த மாணவர்கள் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பு ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறிது நேரத்தில் மாணவர்களே அமைதியாகினர்.
நடந்தது என்ன?
இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கம் மாநில தலைவர் சம்சீர் அகமது அளித்துள்ள பேட்டியில், “கடந்த 16ஆம் தேதி தரமணியில் உள்ள தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இரவு நேரத்தில் காணாமல் போனதாகவும் அவர் மீது பாலியல் சுரண்டல்களும் அத்துமீறல்கள் நடந்ததாகவும் இந்திய மாணவர் சங்கத்திற்கு இங்கு படிக்கக்கூடிய சக மாணவர்கள் மூலம் புகார் வந்தது. அதன் அடிப்படையில் இன்று அனைத்திந்திய மாதர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் இன்று போராட்டத்தை நடத்தினோம்.
16 ஆம் தேதி நடந்த சம்பவத்திற்கு இன்று வரை கல்லூரியில் எந்தவித அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அரசு வழங்கிய வழிகாட்டுதல்களை கல்லூரி நிர்வாகம் முறையாக பின்பற்றவில்லை. பாதிக்கப்பட்ட மாணவியை யாருக்கும் தெரியாமல் கல்வியை பாதுகாக்க வேண்டும் என சட்டம் கூறுகிற நிலையில் மாணவியை கல்லூரியை விட்டு வெளியே அனுப்பி இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவி 18 வயதிற்கு கீழே உள்ளதால் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் முறையாக பின்பற்றி இருக்க வேண்டும். ஆனால் அவை எவற்றையும் கல்லூரி நிர்வாகம் பின்பற்றவில்லை. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்களை அழைத்து கூறிவிட்டால் சம்பவம் முடிந்துவிடும் என நிர்வாகம் நினைத்துள்ளது. கல்லூரி முறையற்ற செயலை வன்மையாக கண்டிக்கிறோம். நாளை மறுநாள் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவதாக உறுதி அளித்துள்ளார்கள்” என்றார்.