தமிழ்நாடு

நீதிமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: கமுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் தொழில் செய்ய தடை

kaleelrahman

நீதிமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கமுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமிக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

கமுதி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கமுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமிக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி வழக்கறிஞர் ராமநாதன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், புகாரில் வழக்கறிஞர் முனியசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி தமிழ்நாடு கவுன்சிலுக்கு பரிந்துரைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஒழுங்கு நடவடிக்கை விசாரணை முடியும்வரை வழக்கறிஞர் முனியசாமி வழக்கறிஞராக தொழில்புரிய தடை விதித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அனைத்து நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் ஆஜராக அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.