Sexual Harassment Pt web
தமிழ்நாடு

கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் ராஜு.. மீது POCSO-வில் வழக்குப்பதிவு.. நடந்தது என்ன?

சென்னை கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் ராஜு மீது, 17 வயது வீராங்கனை அளித்த பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

சென்னை கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் ராஜு மீது, 17 வயது கபடி வீராங்கனை ஒருவர் அளித்துள்ள பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டிச்சேரியை சேர்ந்த ராஜு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கண்ணகி நகரில் மாணவிகளுக்கு கபடி பயிற்சி அளித்து வருகிறார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு பஹ்ரைன் ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனையின் பயிற்சியாளரான ராஜு தன்னிடம் பயிற்சி பெறும் 17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை

இது தொடர்பாக செம்மஞ்சேரி அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது." அதில் ஆசைக்கு இணங்கினால் மட்டுமே போட்டிகளில் விளையாட அனுமதிப்பேன்" என்றும், ஆளில்லாத நேரத்தில் அந்த மாணவி வீட்டிற்கு சென்று மூன்று முறை பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டுள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் சிறுமிகளை மட்டுமே அணியில் சேர்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் கண்ணகி நகரில் உள்ள செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்டதை அறிந்த கபடி பயிற்சியாளர் ராஜு தற்போது தலைமறைவாகியுள்ளார்.

கல்வியிலும் விளையாட்டிலும் முன்னேறி வரும் கண்ணகி நகர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 2020 ஆண்டு போலீஸ் பாய்ஸ் கபடி கிளப்பில் பயிற்சியாளராக இருக்கும்போது அங்கிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததன் காரணமாக விரட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.