சேலத்தில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த மாடு தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது.
செவ்வாய்ப்பேட்டை பகுதியில், வண்டி மாடு ஒன்று சுமார் 8 அடி ஆழமுள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தது. இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மாட்டை மீட்க நீண்ட நேரம் போராடினர். அதன் பின்பு கிரேன் உதவியோடு கால்வாயில் விழுந்த வண்டி மாட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதுபோன்று திறந்து கிடக்கும் கழிவுநீர்க் கால்வாய்களில் மாடுகள் மட்டுமின்றி சிறு குழந்தைகள் தவறி விழவும் வாய்ப்பு உள்ளதால், கால்வாய்களை மூட மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.