திருப்பூரில் சிஎஸ்ஐ தேவாலயத்தில் தடையை மீறி பிரார்த்தனையில் ஈடுபட்ட பாதிரியார் வில்சன்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பூர் வடக்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில், ஆலயங்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் பிரார்த்தனை போன்றவை நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் - அவினாசி சாலை, குமார் நகரிலுள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் தடையை மீறி ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், தடையை மீறி அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் வில்சன்குமார் , மனோ, செல்வகுமார், பிரேம்குமார், குணசேகர், ஜேசுபாலன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்தனர்.