ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வை வலியுறுத்தி கடந்த 4ம் தேதியில் இருந்து 11ம் தேதி வரை போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன், நிலுவைத்தொகை போன்ற கோரிக்கைகளை வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்த நிலையில் உயர்நீதிமன்றம் தலையிட்டு தமிழக அரசு, தொழிற்சங்கங்கள் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு தொழிலாளர்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் போராட்டம் நடத்திய சுமார் ஒரு லட்சம் போக்குவரத்து ஊழியர்களுக்கு 7 நாட்கள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்தியதற்காக ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பாக நாளை கூட்டம் கூட்டி ஆலோசனையும் நடத்தவுள்ளனர்.