தமிழ்நாடு

இணையம் மூலம் இருவழிப் பயணச்சீட்டை முன்பதிவு செய்வோருக்கு சலுகை - எஸ்இடிசி

webteam

இணையம் மூலம் இருவழிப் பயணச்சீட்டை முன்பதிவு செய்வோருக்கு, திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 விழுக்காடு சலுகை வழங்கப்படுவதாக விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள 1,082 பேருந்துகள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் இந்த பேருந்துகளில் பயணிக்க இணையதளம் மற்றும் கைபேசி செயலிமூலம் ஒரு மாதத்திற்கு முன்பே பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்நிலையில், பயணிகள் நீண்ட தொலைவு பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்கவும், தனியார் பேருந்துகள் ரயில் போன்றவற்றில் பயணிப்போரை ஈர்க்கவும், இணையவழியில் இருவழிக்கும் முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டணத்தில் 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். அந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள போக்குவரத்துக் கழக அதிகாரிகள், இந்த சலுகை விழாக் காலங்களில் பொருந்தாது எனத் தெரிவித்துள்ளனர்.