பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிய செட் எனப்படும் மாநிலத் தகுதித் தேர்வு மற்றும் நெட் எனப்படும் தேசியத் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வை ஆண்டு தோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. ஆனால், மாநிலத் தகுதி தேர்வு 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இப்படியான சூழலில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநிலத் தகுதி தேர்வு கடந்த 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடத்தப்பட்டது. இதில் 99 ஆயிரத்து 178 பேர் 43 பாடப் பிரிவுகளில் தேர்வுகளை எழுதினர்.
மத்திய தேர்வுகளில் முதலில் விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டு, கேள்விகளுக்கான பதில்கள் வெளியிடப்படும். ஆனால், மார்ச் 13 ஆம் தேதி கேள்விகளுக்கான பதில்களை டி. ஆர்.பி. வெளியிட்டது. மார்ச் 15 ஆம் தேதிக்குள் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதில் 150 கேள்விகளில் 50 கேள்விகளுக்கான பதில்கள் தவறாக இருந்ததாக தேர்வர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால், இதனை நிரூபிக்க ஒரு புத்தகத்தை சான்றாக காட்ட வேண்டும் என்பதால் சிக்கல்கள் நீடிக்கின்றன. இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்கிறார்கள் தேர்வர்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக Teachers Recruitment Board-யிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, சரியான விளக்கம் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர். அதே நேரத்தில் விரைவில் அறிக்கை வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.