தமிழகத்தில் முழு ஊரடங்கு நாளை முதல் மே 24 வரையில் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இக்கால கட்டத்தில் எவற்றிற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் தவிர பிற கடைகளை திறக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தங்கும் விடுதிகள், அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் செயல்படவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், பார்கள், பெரிய அரங்குகள், கேளிக்கை பூங்காக்கள், கூட்ட அரங்குகள் செயல்பட அனுமதி இல்லை. உள் அரங்குகள், திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்படுவதற்கான தடையும், மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லறை வியாபாரக் கடைகள் செயல்படுவதற்கான தடையும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம், மருத்துவம், வருவாய், பேரிடர் மேலாண்மை, காவல், தீயணைப்பு, சிறை, மாவட்ட நிர்வாகம், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி போன்ற அத்தியாவசிய துறை அலுவலகங்கள் தவிர்த்து பிற அரசு அலுவலகங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு, திருவிழா போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகள், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், தொல்லியல் சின்னங்கள், அகழ்வைப்பகங்கள், அருங்காட்சிகங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு, தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள் இயங்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி சங்கம் மற்றும் குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்குள், பிற மாவட்டங்களுக்கிடையேயான அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து, வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்குச் செல்வோர், நேர்முகத்தேர்வு, மருத்துவமனை செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உணவு விநியோகம், மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை விநியோகிக்கும் நிறுவனங்கள் தவிர பிற ஆன்லைன் விநியோக நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.