தமிழ்நாடு

லட்சக்கணக்கில் பண மோசடி: சென்னையில் சின்னத்திரை நடிகை கைது

லட்சக்கணக்கில் பண மோசடி: சென்னையில் சின்னத்திரை நடிகை கைது

webteam

சென்னையில் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சொகுசு கார்களை வாங்கி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக, சின்னத்திரை நடிகை உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெசப்பாக்கம் அம்மன் நகரைச் சேர்ந்த அனிஷா என்ற பூர்ணிமா, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் சின்னத்திரை நெடுந்தொடர்களிலும் நடித்து வந்தார். இவரும், இவரது கணவர் சக்தி முருகனும் ஸ்கை எக்யூப்மன்ட் என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி, அதில் மின் சாதனங்களை விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில், கே.கே.நகரை சேர்ந்த பிரசாந்த் குமாரின் நிறுவனத்தில் இருந்து 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 101 குளிர்சாதன பெட்டிகளை வாங்கிய அவர்கள், அதற்கு பணம் தராமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் அவர்கள் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டதால், பிரசாந்த் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அனிஷாவையும், அவரது கணவர் சக்தி முருகனின் சகோதரர் ஹரிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள சக்தி முருகனைத் தேடி வருகின்றனர்.