கந்துவட்டி புகாரை விசாரிக்க தனிக்குழு அமைப்பது பற்றி தலைமைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கனகவேல் பாண்டியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில் கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு குடும்பமே தற்கொலை செய்ததை குறிப்பிட்டிருந்தார். மேலும் மதுரை மாவட்டத்திலும் கந்துவட்டி கொடுமையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார். எனவே கந்துவட்டி கொடுமையை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, அதுதொடர்பான புகாரை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் தனிக்குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, தனிக்குழு அமைப்பது பற்றி தமிழக தலைமைச் செயலர், நிதித்துறை செயலர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.