செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

தனிப்பட்ட காரணங்களால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு? முதல்வருக்கு செந்தில் பாலாஜி கடிதம்!

PT WEB

பண மோசடி வழக்கில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, அதுதொடர்பான கடிதத்தை நேற்று இரவு முதல்வருக்கு அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியில் இருந்த செந்தில் பாலாஜி மீது வேலை வழங்க பணம் பெற்றதாக புகார் எழுந்தது.

செந்தில் பாலாஜி

இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது திமுக அரசில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கைது நடவடிக்கையை தொடர்ந்து இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், 3 முறை ஜாமீன் கோரியும் நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. தொடர்ந்து அவர் மீதான நீதிமன்ற காவலும் நீடித்துவந்தது.

இந்த சூழலில், சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான தமிழக முதலமைச்சருக்கு தனது ராஜினாமா கடித்தத்தை அவர் அனுப்பியுள்ளார். இந்தக் கடிதம், துறை மூலமாக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னரே இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வருக்கு செந்தில் பாலாஜி எழுதியுள்ள கடிதத்தில், “தனிப்பட்ட காரணங்களால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.

முன்னதாக பிணை கோரிய போது ‘செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருப்பதால், அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு எதிரான சாட்சியங்களை அவர் அழிக்கக்கூடும்’ என அமலாக்கத்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.