செந்தில் பாலாஜி, ஆர்.என்.ரவி twitter
தமிழ்நாடு

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி அதிரடி நீக்கம்.. மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய ஆளுநர் ரவி

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

Prakash J

கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்தச் சூழலில், நீதிமன்றக் காவலில் இருக்கும் செந்தில் பாலாஜியை மருத்துவர்களின் அனுமதியுடன் அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது. இதுதொடர்பான விசாரணையில், செந்தில் பாலாஜியும் காணொளி வாயிலாகப் பதிலளித்து வருகிறார்.

செந்தில் பாலாஜி இலாகா மாற்றம் தொடர்பான பரிந்துரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். முதல்வரின் கடிதம் 'Mislead and Incorrect' ஆக இருப்பதாகக் கூறி, ஆளுநர் ரவி திருப்பியனுப்பிய நிலையில், தொடர்ந்து ஆளுநரின் கடித்திற்கு தமிழக அரசு தரப்பில் பதில் கடிதம் அளிக்கப்பட்டது. அதற்கு, ‘செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக அவர் தொடர முடியாது’ எனக் கூறி முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்தார்.

R.N.Ravi

அதேநேரத்தில், ‘அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்குக் கூடுதல் துறை ஒதுக்கப்படுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். ஆளுநரின் இந்தப் பதிலால், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இலாகா இல்லாத அமைச்சராகவும் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு அமைச்சரவையின் இணையதளத்தில் இடம்பிடித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.

அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார். அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, “அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை. இதைச் சட்டரீதியாகச் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.