செந்தில் பாலாஜி, ஆர்.என்.ரவி
செந்தில் பாலாஜி, ஆர்.என்.ரவி twitter
தமிழ்நாடு

"ஆளுநருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரமில்லை" - செந்தில் பாலாஜி நீக்கம்; திமுக, கூட்டணிகள் எதிர்ப்பு!

Prakash J

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார்.

RN Ravi

தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார். அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருப்பதற்கு தமிழகத்தில் ஆதரவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

senthil balaji, cm stalin

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, “அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை. இதைச் சட்டரீதியாகச் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன், செந்தில் பாலாஜி, ஆர்.என்.ரவி

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ஆளுநர், “ஆர்.என்.ரவி அவர்களின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயற்பாடுகளைப் போலவே உள்ளது. அவருக்கு என்ன ஆனது என்கிற பரிதாபம் மேலிடுகிறது. அவர் தனது அதிகார வரம்புகளை அறியாமல் செயல்படுகிறாரா அல்லது உள்நோக்கத்துடன் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா? அவரது தான்தோன்றித்தனமான போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, "ஒருவர் அமைச்சரவையில் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பது முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டது; அரசியல் சட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் செயல்பட்டுள்ளார்; நீதிமன்றத்துக்குச் சென்றால் ஆளுநர் ரவி மீண்டும் குட்டுப்படுவார்" எனத் தெரிவித்துள்ளார்.

வைகோ, செந்தில் பாலாஜி

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கியது சட்டவிரோதமானது மட்டுமல்ல; ஆளுநரின் அதிகார வரம்பை மீறிய செயல்; ஆளுநர் நீக்கியதை நீதிமன்றம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது” எனத் தெரிவித்துள்ளார்.

இரா.முத்தரசன், செந்தில் பாலாஜி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “வேண்டுமென்றே ஆளுநர் ஒரு மோதலை உருவாக்குகிறார்; அரசியலமைப்புச் சட்டத்தைக் குப்பையில் தூக்கி வீசி எறிந்துவிட்டு, தனக்குத்தானே அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறார்; அரசியல் ரீதியான ஒரு நெருக்கடியை ஏற்படுத்த ஆளுநர் முயற்சிக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன், “ஆளுநரின் உத்தரவு ஒரு வெற்றுக் காகிதம் மட்டுமே. ஆளுநருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி, வில்சன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், “ஓர் அமைச்சரை மாற்றவோ, நீக்கவோ முதல்வருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது.

செந்தில் பாலாஜி, ரவிக்குமார்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை அவமதித்து, தானே ஒரு சூப்பர் முதல்வராக நடந்துகொள்ள ஆளுநர் முற்பட்டால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகத்தான் நீதிமன்றமும் பார்க்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

செந்தில்பாலாஜி, அப்பாவு

சபாநாயகர் அப்பாவு, “ஆளுநர் தன் கடமைகளைப் பாதுகாத்து நடக்க வேண்டும். தன் நிலையிலிருந்து தவறாமல் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞர் விஜயன், “அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் முதல்வருக்கே உள்ளது.

செந்தில் பாலாஜி, விஜயன்

அமைச்சரை நேரடியாகப் பதவி நீக்கும் அதிகாரம் அரசியல் சட்டப்படி ஆளுநருக்கு வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

செம்மலை, ஆர்.என்.ரவி, செந்தில்பாலாஜி

அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, “ஓர் அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லையென்று கூறுகிறார்கள். ஆனால், ஒரு கைதியை அமைச்சராக வைத்திருப்பதற்கு சட்டம் இடம் கொடுக்கிறதா” எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.

வானதி சீனிசாசன், செந்தில் பாலாஜி, ஆர்.என்.ரவி

பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியதை எதிர்த்து திமுக நீதிமன்றத்தில் முறையிடலாம்” எனப் பதிலளித்துள்ளார்.

சு.வெங்கடேசன், செந்தில் பாலாஜி, ஆர்.என்.ரவி

எம்.பி. சு.வெங்கடேசன், “அமைச்சரின் நியமனமும், நீக்கமும் முதல்வரின் அதிகாரம் கவர்னரே! உங்கள் மூக்கு எவ்வளவு நுழையலாம் என்பதற்கு அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர்! அத்துமீறலை அனுமதிக்காது தமிழ்நாடு” எனத் தெரிவித்துள்ளார்.