அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி கோப்புப் படம்
தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு! முதன்மை நீதிமன்றம் உத்தரவு!

Prakash J

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் நெஞ்சுவலி காரணமாக, நீதிமன்றத்தின் அனுமதியோடு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதேநேரத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. அப்படியே, மருத்துவர்கள் அனுமதியுடன் விசாரணை நடத்தலாம் என அமலாக்கத் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

செந்தில் பாலாஜி - அமலாக்கத் துறை

தொடர்ந்து அவர் தரப்பிலான வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருந்துவரும் நிலையில், கடந்த 28 ஆம் தேதியுடன் செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிவடைந்தது. அப்போது, மருத்துவமனையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காணொளி வாயிலாக ஆஜரானார். அவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்த நீதிபதி, அவருக்கு வழங்கப்பட்டிருந்த நீதிமன்றக் காவலை ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அதன்படி, இன்றுடன் அவருக்கு நீதிமன்ற காவல் நிறைவடைய இருந்தது.

இந்த நிலையில், நீதிமன்றம் காவலை நீட்டிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்காக இன்று காவேரி மருத்துவமனையில் இருந்து காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கில் மனைவி மேகலா தரப்பு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.