செந்தில்பாலாஜி - விஜய் Pt web
தமிழ்நாடு

உதவியது யார்? ஓடியது யார்?; மக்களுக்குத் தெரியும் - முதல்வருக்கு செந்தில்பாலாஜி பதில்!

கரூர் துயரச் சம்பவத்தின்போது அத்தனை பேர் இறந்துள்ளதாகக் பத்திரிகையாளர்கள் கூறியும் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என முதல்வரின் விமர்சனத்துக்கு செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

Premkumar S

2025 செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப்பணி நியமன ஆணை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், முதல்வர் விஜய் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முன்னதாக, நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், எனக்கு அனைத்தையும்விட வலியும், காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம்தான் எனத் தெரிவித்ததுடன், நிலைமை மோசமாக இருக்கும் போது தங்களை பரப்புரை செய்ய கரூர் காவல்துறை அனுமதித்தது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்துப் பேசிய அவர், கரூர் கம்பெனி ஓனர், நிக்காமல் ஓடுக்கொண்டே இருக்கிறார் என ’வேட்டைக்காரன்’ திரைப்பட பாடலை பாடி விமர்சித்திருந்தார்.

செந்தில் பாலாஜி

இந்தசூழலில் தான், முதல்வர் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கரூர் துயரச் சம்பவத்தின்போது அத்தனை பேர் இறந்துள்ளதாகக் பத்திரிகையாளர்கள் கூறியும் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?

மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும். அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?

திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஓடு. ஓடு.. ஓடு...” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.