நீதிபதி எஸ்.அல்லி, செந்தில்பாலாஜி
நீதிபதி எஸ்.அல்லி, செந்தில்பாலாஜி புதிய தலைமுறை
தமிழ்நாடு

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்! நீதிபதி உத்தரவு

PT WEB

செந்தில் பாலாஜியின் சென்னை இல்லம் மற்றும் அவரது சட்டமன்ற அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு 3 மணியளவில் தெரிவித்தனர். அதேநேரத்தில், அவருக்கு நேற்று நள்ளிரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில்பாலாஜியை, சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி சென்று சந்தித்தார்.

செந்தில்பாலாஜியின் உடல்நலம் குறித்து மட்டுமே தாம், விசாரிக்க வந்திருப்பதாகவும், வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துக்கொள்ளுமாறும் நீதிபதி இரு தரப்புக்கும் அறிவுரை வழங்கினார்.

அதேநேரத்தில், செந்தில்பாலாஜி தரப்பில் ஜாமீன் மனுவும் நீதிபதியிடம் உடனடியாக தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நீதிபதி, ‘நீதிமன்றத்தில் விசாரணைக்கு பிறகு முடிவெடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார். ஆனால், விசாரணை எப்போது நடைபெறும் என்பதை சொல்லவில்லை.

இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில்பாலாஜி மனுவை நிராகரித்து, நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். செந்தில்பாலாஜி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.