முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் விடிய விடிய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக ரூ.4.25 கோடி மோசடி செய்ததாக வழக்குப் பதியப்பட்டது. இதுதொடர்பாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகள், நிறுவனங்கள் என மொத்தம் 13 இடங்களில் நேற்று பிற்பகல் சோதனை தொடங்கியது.
கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஜவுளி ஆலை, கோவை சாலையில் உள்ள உணவு விடுதி உள்ளிட்ட இடங்களிலும் 36க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 4 இடங்களில் நேற்றிரவுடன் சோதனை முடிந்துவிட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 9 இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையில் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது பற்றிய விவரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
டிடிவி தினகரன் ஆதரவாளர்களில் முக்கியமானவர் செந்தில் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.