செந்தில்பாலாஜி, ஆர்.என்.ரவி
செந்தில்பாலாஜி, ஆர்.என்.ரவி file image
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க முடியாது; துறைகள் மாற்றத்திற்கு ஒப்புதல்! - மீண்டும் ஆளுநர் அதிரடி

Prakash J

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துவரும் செந்தில் பாலாஜிக்கு 2 அல்லது 3 நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரிடம் இருக்கும் துறைகள் வேறு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற கேள்வி எழுந்தநிலையில், இலாகா மாற்றம் தொடர்பான பரிந்துரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு நேற்று அனுப்பி வைத்தார். ஆனால், முதல்வரின் கடிதம் 'Mislead and Incorrect' ஆக இருப்பதாகக் கூறி, ஆளுநர் ரவி திருப்பியனுப்பினார். தொடர்ந்து ஆளுநரின் கடித்திற்கு தமிழக அரசு தரப்பில் பதில் கடிதமும் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “இந்தமுறை அனுப்பிய கடிதத்தை ஆளுநர் ஏற்பார் என நம்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தார். இலாகா மாற்றம் என்பது முதல்வரின் விருப்பத்தின் பெயரிலானது, இதில் ஆளுநர் தலையிட முடியாது என கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்தார்.

இந்த நிலையில், ‘செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக அவர் தொடர முடியாது’ எனக் கூறி முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்துள்ளார். அதேநேரத்தில், ‘அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்குக் கூடுதல் துறை ஒதுக்கப்படுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

செந்தில் பாலாஜியிடம் இருக்கும் மின்சாரத் துறை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர் முத்துசாமியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட இருக்கிறது.

முன்னதாக செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் அமலாக்கத் துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். ஜூன் 14 நள்ளிரவில் சோதனையை நிறைவு செய்த அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியதால் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அவர் உட்படுத்தப்பட்டார்.

அவருக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தரப்பில் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதன்படி, அவரை உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.