செந்தில்பாலாஜி file image
தமிழ்நாடு

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா? - நீதிமன்றத்தில் காரசார விவாதம்! நாளை தீர்ப்பு!

செந்தில்பாலாஜி தரப்பின் இடைக்கால ஜாமீன் மனு மற்றும் அமலாக்கத் துறையின் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு ஆகியவற்றுக்கு நாளை தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

செந்தில் பாலாஜியின் சென்னை இல்லம் மற்றும் அவரது சட்டமன்ற அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு 3 மணியளவில் தெரிவித்தனர். அதேநேரத்தில், அவருக்கு நேற்று நள்ளிரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில்பாலாஜியை, சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி இன்று நேரில் சென்று சந்தித்தார். செந்தில்பாலாஜியின் உடல்நலம் குறித்து மட்டுமே தாம், விசாரிக்க வந்திருப்பதாகவும், வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துக்கொள்ளுமாறும் நீதிபதி இரு தரப்புக்கும் அறிவுரை வழங்கினார்.

அதேநேரத்தில், செந்தில்பாலாஜி தரப்பில் ஜாமீன் மனுவும் நீதிபதியிடம் உடனடியாக தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நீதிபதி, ‘நீதிமன்றத்தில் விசாரணைக்கு பிறகு முடிவெடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார். ஆனால், விசாரணை எப்போது நடைபெறும் என்பதை சொல்லவில்லை. இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில்பாலாஜி மனுவை நிராகரித்து, நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். செந்தில்பாலாஜி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், பின்னர் இன்று மாலையே செந்தில்பாலாஜி ஜாமீன் மனு குறித்து விசாரணை தொடங்கியது. செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ”இந்த கைது சட்டவிரோதமானது; ஆகையால், ரிமாண்டை நிராகரிக்க வேண்டும். அவரது, உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். மேலும், செந்தில்பாலாஜி கைது குறித்து அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத் துறை தகவல் தெரிவிக்கவில்லை. தவிர, கைதுக்கான காரணங்களை செந்தில்பாலாஜியிடமே தெரிவிக்கவில்லை. உடல்நலப் பாதிப்பால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில்பாலாஜிக்கு 3 அடைப்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரைத்துள்ளது. இஎஸ்ஐ மருத்துவக் குழு அறிக்கையும் அதை ஏற்றுக் கொண்டுள்ளது. அவருடைய உயிரின் முக்கியத்துவத்தைக் கருதி அறுவைசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அறுவைசிகிச்சைக்காக காவிரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். கடந்த 22 மணி நேரம் அவர் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்” என வாதத்தை வைத்தார்.

அதற்கு அமலாக்கத் துறை சார்பில் ஆஜராகிய மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ”சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் குற்ற விசாரணை முறை சட்ட விதிகள் பொருந்தாது. கைது காரணங்கள் சொல்லப்பட்டன. கைது மெமோவை பெற செந்தில்பாலாஜி மறுத்தார். கைது செய்யப்படுவோம் என தெரிந்தே அதைப் பெற மறுத்து விட்டார். ரிமாண்ட் செய்யப்பட்டுவிட்ட நிலையில் அதை நிராகரிக்க கோர முடியாது. ரிமாண்ட் உத்தரவு சரியானதே.

ஆகையால், ஜாமீன் வழங்கக்கூடாது. இடைக்கால ஜாமீன் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை. எங்களிடமும் மருத்துவக் குழு உள்ளது. தற்போதே அவர், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில்தான் உள்ளார். நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர், தற்போது உடல் நலகுறைவு எனக் கூறுகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால், நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம். அவருக்குத் தேவையான சிகிச்சையை வழங்குவோம். சுதந்திரமான மருத்துவக் குழு அமைக்க வேண்டும். மருத்துவ அறிக்கையில் நம்பிக்கை இல்லை” என வாதம் வைத்தார்.

இருதரப்பிலும் இன்று வாதங்கள் வைக்கப்பட்டன. இதையடுத்து செந்தில்பாலாஜி தரப்பின் இடைக்கால ஜாமீன் மீதான மனு, அமலாக்கத் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு, நீதிமன்ற காவலில் அடைத்த உத்தரவை கைவிடக் கோரிய மனு என மூன்று மனுக்களும் நாளை தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.