ராஜ்நாத் சிங், ஸ்டாலின்
ராஜ்நாத் சிங், ஸ்டாலின் புதிய தலைமுறை
தமிழ்நாடு

”செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார்”-மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காட்டம்

PT WEB

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மேற்கு தாம்பரத்தில் உள்ள சண்முகம் சாலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “தமிழகத்தின் செங்கோல் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நிறுவியதால் அது தமிழகத்தின் புதிய வரலாறு. இந்தியா என்ன சொல்லப் போகிறது என உலக நாடுகள் காத்துக் கிடக்கின்றன.

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் குரலுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. இந்தியா எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காது. ஆனால், நமது நாட்டின் மீது யாரும் தாக்குதல் நடத்தினால் அவர்களை விடமாட்டோம். அந்த அளவுக்கு நமக்கு வலு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஆட்சி எந்தளவுக்கு ஊழல் செய்கிறது என்பது இந்தியா முழுவதும் தெரிந்திருக்கிறது.

ஒரே ஒரு முறை பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துங்கள். ஊழலற்ற ஆட்சியை உங்களுக்கு தருகிறோம். பா.ஐ.க. ஆட்சியில் ஊழல் நடந்தால் அவர்கள் இருக்கும் இடம் அரசு கட்டில் அல்ல, சிறைச்சாலையாகத்தான் இருக்கும். இந்தியாவின் பெருமைக்குரிய மாநிலம் தமிழகம்.

இதனால் தான் எந்தவொரு முக்கிய திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் இருந்து தொடங்குகிறார். பிரதமரின் ஆசை தமிழகம் ஒட்டுமொத்தமாக முன்னேற வேண்டும். இதை முன்வைத்து தான் பிரதமர் பணியாற்றி வருகிறார். பிரதமரை பாராட்ட மனமில்லாத எனது நண்பர் மு.க.ஸ்டாலின் பிரதமரை குற்றம் சொல்கிறார். அவரது பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்துகிறார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக செந்தில் பாலாஜியை நாங்கள் கைதுசெய்து விட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவிக்கிறார். ஆனால் அவர் அ.தி.மு.க.வில் இருந்தபோது இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இரட்டை வேடம் போடுகிறார் முதல்வர்” என்றார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேசிய கருத்து குறித்து கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.