மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன்
மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் pt web
தமிழ்நாடு

“இப்படி குடியரசு தலைவர் சொன்னால் என்னவாகும்; மிகப்பெரிய சட்டவிரோதம்” மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்!

Angeshwar G

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு, செயலாளர் சீனிவாசன் மலர்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுவதுமாக படிக்காமல் 2 நிமிடங்களிலேயே நிறைவு செய்தார்.

வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம் எனக் கூறி தனது உரையை நிறைவு செய்த ஆளுநர் பேசியது என்னவெனில், “சட்டப்பேரவைக்கு முன்னும் பின்னும் தேசியகீதம் பாடப்பட்டிருக்க வேண்டும் என்ற மரபு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த உரையில் உள்ள பல பகுதிகளில் எனக்கு தார்மீக ரீதியாகவும் தகவல் ரீதியாகவும் உடன்பாடு இல்லை. நான் அதற்கு குரல் கொடுப்பது அரசியல் சாசனத்திற்கு கேலிக்குறியதாக்குவதாகும். மக்களின் நலனுக்காக இந்த சட்டப்பேரவை நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநரின் செயல்பாடு குறித்து புதிய தலைமுறையிடம் மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவன, “இதுவரை நாம் கடைபிடித்த நடைமுறைகளில் இந்த ஆளுநர் போல் யாரும் குற்றம் சுமத்தி பேசியது கிடையாது. தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடி, முடிக்கும்போது தேசிய கீதத்துடன் முடிப்போம். போனமுறை அவர்தான் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னாடியே அவையைவிட்டு வெளியேறினார். இது மக்களுக்கும் தெரியும்.

journalist ayyanathan

கவர்னர் உரைகளில் அரசு குறிப்பிட்டிருக்கக்கூடிய விஷயங்களில் தனக்கு உடன்பாடு இல்லை என சொல்வதற்கு ஆளுநருக்கு அரசமைப்பு ரீதியாக எவ்வித உரிமையும் இல்லை. மாநில அரசின் அங்கம் அவர். அப்படி இருக்கும் அவர் தனக்கென கொள்கை வகுத்துக்கொண்டு அதை அரசின் மீது திணிக்க முடியாது. இதேபோல் குடியரசுத் தலைவர் சொன்னால் என்ன ஆகும்? எப்படி இது மக்களது நலனுக்கு புறம்பாக இருக்கிறது. திட்டமிட்டு அவர் அரசியல் செய்கிறார் என்பதைத் தாண்டி இதில் வேறுவிதமான எந்த பொருளும் இல்லை.

அவருக்கு அளிக்கப்பட்ட உரையில் எவ்விதமான கருத்து இருந்தாலும், முன்னரே தலைமை செயலகத்திற்கு எழுதி உறுதிப்படுத்திக்கொண்டு சொல்லலாம். ஆளுநரின் சம்மதத்தின்படி தான் உரை தயாரிக்கப்பட வேண்டும் என்று சொன்னால் அது மிகப்பெரிய சட்டவிரோதம், அது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை அவமதிப்பதாகும். ஏனெனில் அரசு தான் செயல்படபோகிறது. ஆளுநர் செயல்படப்போவதில்லை. நாளை ஆளுநர் ஒரு மாநிலத்திற்கு மாற்றலாகிபோகலாம். இல்லையெனில் ஆளுநர் பதவியில் இருந்தே போய்விடலாம். யாரும் அவரைப்பார்த்து ஏன் நல்லது செய்யவில்லை என கேட்கப்போவதில்லை. ஆனால், அரசைக் கேட்பார்கள். ஆட்சியாளர் என்பது முதல்வரும் அவர் சார்ந்த அமைச்சரவையும் தான்.

பேரவையில் சபாநாயகர் அப்பாவு - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநரின் கேள்விகளுக்கு பதில்கூற வேண்டிய பொறுப்புடையவர் முதல்வர். மற்றபடி, எது மக்களுக்கு நல்லது, கெட்டது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் இவருக்கு கிடையாது” என்றார்.