செய்தியாளர்: பால வெற்றிவேல்
அதிமுகவின் கொடி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் படங்கள் மற்றும் செல்போன் ஸ்டிக்கர்கள் என தெருவோரத்தில் விற்பனை செய்து வருகின்றனர் அன்பழகன் - லலிதா இந்த தம்பதியர். 68 வயதாகும் லலிதாவிற்கு, ஜெயலலிதா என்றால் கொள்ளை பிரியம். ஜெயலலிதா கட்சியில் சேர்வதற்கு முன்பாக சர்ச் பார்க் கான்வென்ட் பள்ளியில் படிக்கும் போதே ஜெயலலிதாவின் நடனத்தையும், நடிகையான பிறகு அவர் நடிப்பையும் கண்டு ரசிகை ஆகி இருக்கிறார் லலிதா.
பின்னர் ஜெயலலிதா அதிமுகவில் சேர்ந்த பிறகு லலிதா அதிமுகவில் சேர்ந்துள்ளார். இதையடுத்து அன்பழகனோடு திருமணம் நடந்துள்ளது. அன்பழகன் சிறு வயதில் இருந்தே எம்ஜிஆர் ரசிகர் என்பதால் அவர்களது வியாபாரத்தையே அதிமுகவின் தலைவர்களின் படங்களை விற்கும் தொழிலாக மாற்றிக் கொண்டனர் இருவரும். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கீழே கடை போட்டு வியாபாரம் செய்வதோடு அதிமுக கூட்டங்கள் நடைபெறும் இடங்களிலும் கடைவிரித்து வியாபாரம் செய்து வருகின்றனர். கடந்த 35 ஆண்டுகளாக அதிமுகவின் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டும் வருகிறார்கள் இந்த தம்பதியர்.
நான்கு பிள்ளைகளைப் பெற்று அவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், அவர்கள் தங்களை கவனிப்பதில்லை எனக்கூறும் லலிதா, “அதிமுக தலைவர்களின் படங்களை விற்றுதான் வாழ்க்கை நகர்த்துகிறோம்” என்று கனத்த குரலில் தெரவித்தார். ஜெயலலிதா 2016-ல் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்து இறந்த பிறகு தாங்களும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்ததாகவும் கூறினார். இருப்பினும் பின் நாட்களில் அந்த எண்ணங்களிலிருந்து அவர் மீண்டுள்ளார்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்)
இந்த அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களான இந்த மூத்த தம்பதியர் நம்மிடையே பேசுகையில், “தற்போது அதிமுக கட்சி அலுவலகம், எடப்பாடி பழனிசாமி வீடு அருகே அல்லது பொதுக் கூட்டங்களில் விற்பனை செய்கிறோம். ஆனால் இதற்கெல்லாம் மிகவும் சிரமப்படுகிறோம். அதிமுக கட்சிக் கொடிகள், சின்னம், தலைவர்களின் படங்களை நாங்கள் ஒரு இடத்தில் நிலையாக விற்பனை செய்ய எடப்பாடி பழனிசாமி அனுமதி தரவேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்