தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில், இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருக்கிறார். இந்நிலையில், அவருக்கு தவெக நிர்வாக குழுவை வழி நடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இது தொடர்பாகப் புதிய தலைமுறையிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “இந்த நிகழ்வு செங்கோட்டையன் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை. 1970களில் இருந்து ஒரு கட்சியில் பயணத்தைத் துவங்கி, 2025ல் வேறு கட்சிக்கு மாறியிருக்கிறார். ஒரு ஒற்றுமை என்னவென்றால் இரண்டு கட்சியுமே எம்ஜிஆர் கட்சிபோல்தான் இருக்கிறது. இங்கு செங்கோட்டையனுக்கு பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்போவதாகத்தான் செய்திகள் வருகின்றன. அப்படி அவரை பயன்படுத்திக்கொண்டால் மிக நல்லவிஷயம். செங்கோட்டையன் அதிர்ந்து பேசாதவர்.. ஆனால், அனுபவம் மிக்கவர், தமிழ்நாட்டின் உள்ளும்புறமும் தெரிந்துகொண்டவர். இதையெல்லாம் விஜய் பயன்படுத்திக்கொள்வார் என்றுதான் தெரிகிறது” எனத் தெரிவித்தார்.