அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன் திடீர் திருப்பமாக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு விஜயையும் இன்று சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் விவாதம் ஆகியுள்ளது.
அதிமுகவில் எம்.ஜி.ஆர் காலம் தொட்டு இருந்து வந்த செங்கோட்டையன் கட்சி தலைமை மீது அதிருப்தியை தெரிவித்து வந்தார். செய்தியாளர்களை சந்தித்து அதிமுக இணைப்பு குறித்து பேசினார். அதனையடுத்து கட்சியில் அவர் வகித்த பொறுப்புகள் அனைத்தையும் பறித்தார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் தேவர் ஜெயந்தி அன்று தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை சந்தித்த பிறகு அடிப்படை உறுப்பினரும் இல்லாமல் ஆனது. பின்னர் செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபடுவார் என்றே சொல்லப்பட்டு வந்தது. ஆனால், திடீர் திருப்பமாக அவர் தவெகவில் இணைவதாக செய்திகள் வந்தது.
இதற்கிடையில் திமுக அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்ததால் அன்வர் ராஜா, மருது அழகு ராஜ், மனோஜ் பாண்டியன் போல திமுகவில் இணைவார் என்றும் கணிக்கப்பட்டது. இதற்கிடையில் இன்று காலை தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இத்தகைய சூழலில் திடீர் திருப்பமாக சென்னை பட்டினப்பாக்கத்தில் விஜய் உடன் செங்கோட்டையன் சந்தித்தார். இந்த சந்திப்பு நாளை அவர் தவெகவில் இணைகிறார் என்ற செய்தியை உறுதி செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய பத்திரிகையாளர் சுவாமிநாதன், “செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பது அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு. அவர் திமுகவிற்கு சென்றிருந்தால் துரோகம் செய்துவிட்டார் என்று ஒருவரியில் அதிமுகவால் கடந்து சென்றிருக்க முடியும். இனி அதற்கான சூழல் இல்லை. இனிமேல்தான் தேர்தல் களேபரம் தொடங்க இருப்பதால் அதிமுகவில் சீட் கிடைக்காமல் இருப்பவர்களை செங்கோட்டையனை கொண்டு அவர்களை தவெகவில் இணைப்பதற்கான முயற்சிகள் நடக்கலாம். இனிவரும் காலம் அதிமுகவிற்கு பெரும் சிக்கல்கள் எழக்கூடிய காலமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், “தொடர்ச்சியாக விஜய் எம்ஜிஆரின் பெயரையும் அவரது பாடல்களையும் பயன்படுத்துகிறார். அண்ணாவின் பெயரையும் பயன்படுத்துகிறார். இவர்கள் எல்லாம் தவெகவிற்கு செல்லும்பட்சத்தில் எம்ஜிஆர், அண்ணாவின் பெயரை பயன்படுத்துவதற்கு உரிமை இருப்பதுபோல் ஆகிவிடும். ஒருவேளை டிடிவியும், ஓபிஎஸ்ஸும் தவெக அணியில் சேர்ந்துகொண்டார்கள் என்றால் அதிமுகவின் ஒரு பிரிவே தன்னுடன் இருப்பதுபோன்ற தோற்றத்தை விஜயால் ஏற்படுத்த முடியும். ஓபிஎஸ் 15 நாட்கள் கெடு கொடுத்திருக்கிறார்.. டிடிவி ஏற்கனவே விஜய் ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருக்கிறார். இவர்களை அதிமுகவில் இணைக்கமுடியவில்லை என்று தவெக அணியில் செங்கோட்டையன் இணைத்துவிட்டால் அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குதான் சிக்கல். செங்கோட்டையனை தவெக எந்த அளவிற்கு பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்துதான் தவெகவிற்கான பலம் பலவீனம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்,